Saturday, July 9, 2016

பரிசு


ஆஹாஷினி ! அடுத்தமாதம் ஜந்து வயதை எட்டிப்பிடிக்கப்போகின்றாள்.
அதென்ன ஆஹாஷினி என்ற பெயர்? ஹிந்திப்பிள்ளையா என்றெல்லாம் யோசிக்கக்கூடாது. சுத்த தமிழ்ப்பொண்ணுதான் ஆஹாஷினி.
அம்மா பெயர் கனகசுந்தரவள்ளி ,அப்பா பெயர் கனகசுந்தரம்.
இப்போதெல்லாம் பிள்ளைகளுக்கு இப்படிப்பெயர் வைப்பதுதானே பெஷன். பெயரில் ஒரு வட எழுத்தாவது இருப்பது இப்போது கட்டாயமாகிப்போனது. ஆஹாஷினியில் இரண்டு வட எழுத்துக்கள் இருப்பதாக அந்தப்பெயரைவைத்த கனகம் எனப்படும் கனகசுந்தரவள்ளி அடிக்கடி பெருமைப்பட்டுக்கொள்ளுவாள்.
கனகத்தின் அம்மா ,அதுதான் ஆஹாஷினியின் பாட்டியின் நிலைதான் பாவம்.
தன் பேத்தியின் பெயரைச்சொல்லும்போது மிச்சமிருக்கும் இர்ண்டு மூன்று பல்லும்கூட உடைந்துவிழுந்துவிடும் போல இருக்கும் அவளுக்கு.
`பிள்ளைக்குப்பெயர் வைக்கச் சொன்னால் ஏன் தான் சைனாவில இருக்கிற ஊருக்கு பெயர் வைக்கிறமாதிரி வைக்கிறார்களோ ?` என்று அடிக்கடி கடிந்துகொள்வாள். அவள் எப்போதும் பேத்தியை ஆகாசினி என்றுதான் அழைப்பாள்.அதைத்தாண்டி அவளால் உச்சரிக்கவும்முடியாது.
ஆஹாஷினியின் ஜந்தாவது பிறந்தநாளைப் பெரிதாகக் கொண்டாடவேண்டும் என்பதே கனகத்தின் இப்போதைய ஒரே கனவு. பெரிதாக என்றால் ,வெளிநாட்டில் இருக்கும் தன் சொந்தக்காரங்க கொண்டாடியதைவிட பெரிதாக கொண்டாடவேண்டும்.
லங்காசிறி வெப் சைட்டில கடாயம் பிறந்தநாள் வாழ்த்துபோட்டே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள்.
கணவனிடம் இதுபற்றி சொன்னாள்.
`என்னங்க பிள்ளட ஜந்தாவது பேர்த் டே வருது பெருசா கொண்டாடனும்`
அதுக்கு கணவன் ,
`பேர்த்டே தானே சும்மா ஏன் ஆடம்பரம் சின்னதா வீட்டிலேயே கேக் வெட்டுவோமே `என்றான்.
`என்ன வீட்டிலேயே? அங்க வெளிநாட்டில அந்த இந்த வேலை செய்யிறவங்களே பெரிசா கொண்டாடி பேஸ் புக்கில போடுறாங்க.
நீங்க டிக்கிரி வச்சிருக்கிற மனேஜர் , நமக்கென ஒரு கெளரவம் வேண்டாமா?` என சற்று குரலை உயர்த்தியே கேட்டாள்.
இதற்குமேல் கதைக்க அவனுக்குத் திராணியில்லை.
`சரி சரி ஏதொ செய்து தொலை ` என்று விட்டுவிட்டான்.
ஒரு பெயர்போன ஹொட்டலை புக் பண்ணினாள் கனகம். இருநூறு பேருக்கு டினர் வுபே ஓர்டர் பண்ணிய‌வள் , மெனுவில் பன்னீர் , மஷ்ரூம் ,கஜூ கறிகள் வரும்படி செய்திருந்தாள். அவையெல்லாம் சாப்பாட்டில் இருப்பதுதானே இப்போது விருந்து கொடுக்கும் தமிழரின் கெளரவத்தைப் பறை சாற்றும்.
ஒரு மேக்கப்காரியையும் புக் பண்ணி இருந்தாள்.
முக்கியமா மேக்கப் ஆஹாஷினிக்கு அல்ல கனகத்துக்குத்தான்.
ஹொட்டல் டெக்கரேசனை ஒரு இவன்ட் ஓர்கனைசரிடம் கொடுத்துவிட்டாள். வீடியோ, போட்டோவை ஒரு பிரபல ஸ்டூடியோவில் ஒப்படைத்துவிட்டாள். வீடியோ பக்கேஜில் ஆப்டர் சூட், பிரி சூட் என நவீன ரக சமாச்சாரங்கள் அத்தனையும் இருந்தன.
அடுத்து ஆஹாஷினிக்கு எடுத்திருக்கும் பார்ட்டி புரோக். கலர் நல்லாத்தான் இருந்தது. ஆனால் துணிதான் பொலித்தினை பொசுக்கிவிட்ட மாதிரி சொர சொர என இருந்தது. அந்தச் சட்டை அடுக்கு அடுக்காக இருந்தது. அந்த பாரத்தை ஒரு ஜந்து வயதுக் குழந்தை எப்படித் தாங்கும் என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
தன் கெளரவத்துக்கு ஏற்றமாதிரி எல்லோரையும் அழைத்திருந்தாள்.
அழைப்பிதல் ஒன்று மட்டும் நூற்றைம்பது ரூபாய்.
...................................................................
அன்று ஆஹாஷினி பிறந்தநாள்,
காலையில இருந்தே சுறு சுறுப்பானது வீடு.
மேக்கப்காரி மத்தியானம் பன்னிரன்டு மணிக்கே வந்து கனகத்தின் முகத்தில் களி மாதிரி ஏதோ ஒன்றைப் பூசி படுக்கவைத்துவிட்டாள்.
ஆஹாஷினியைக் குளிப்பாட்டி உடை உடுத்தி மேக்கப் காரியின் டச் அப் வேலைகளுக்கு பிறகு ஹொட்டலுக்கும் போகும்வரை மடியில் வைத்திருந்தாள் வேலம்மா.
வேலம்மா கனகத்தின் வேலைக்காரி.
ஆஹாஷினிக்கு ஒரு வயதாகும் போது வேலைக்குச் சேர்ந்தவள். கனகத்தைவிட ஆஹாஷினியை அதிகம் பார்த்துக்கொண்டது
வேலம்மாதான் .அதனாலேயே வேலம்மாவுக்கு ஆஹாஷினி மீது
கொஞ்சம் அதீத பாசம்.
மேக்கப் எல்லாம் முடிந்தவுடன் , இரவு ஏழு மணி பார்ட்டிக்கு ஜந்து மணிக்கே வரும்படி வீடியோக்காரன் கேட்டிருந்ததால் ,அவசர அவசரமாக ஹொட்டலுக்குப் புறப்பாட்டார்கள்.
போகும்போது கனகம் ,
`சரி வேலம்மா, நீ வீட்டுக்குப்போயிட்டு
நாளைக்கு கொஞ்சம் சீக்கிரமே வந்துடு, எல்லாத்தையும் கிளீன்
பண்ணவேண்டும்` என்று சொல்லிவிட்டுப்போனாள்.
ஹொட்டலில் பார்ட்டி அமோகமாக நடந்தது. இவன்ட் மனேஜர்
டி .ஜே அரேஞ் பண்ணி இருந்தான். ஒருபக்கச் சுவரில் வீடியோ போய்க்கொண்டிருந்தது. வீடியோவில் லங்கா சிறியில் வந்த
பிறந்தாள் வாழ்த்தும் போனது.
பார்ட்டி இனிதே நிறைவுபெற இரவு பத்துமணியானது.
வீட்டுக்குக் களைப்புடன் வந்த கனகம் வாசலில் வேலம்மா தன் மகளுடன் நிற்பதைப்பார்த்தாள்.
ஓ பிள்ளைக்கு பேர்த்டே என்றதால ஏதும் கிடைக்கும் என்று காத்துக்கொண்டு இருக்கிறாள் போல என நினைத்துக்கொண்டாள் கனகம்.
`வா வேலம்மா ஏன் இந்த நேரத்தில வந்திருக்கிறாய், காலையில வந்து கேட்டு இருக்கலாம்தானே` என்றாள் கனகம்.
இல்லம்மா....
என்ட மகளுக்கும் இன்றைக்குத்தான் பிறந்தநாள், வீட்டில கேக் வெட்டினோம், அப்படியோ உங்களுக்கும் கொடுத்துட்டு போவம் என்று வந்தேன் அதோட‌ ஆஹாஷினிப் பாப்பாட பிறந்த நாளுக்கும் ஒன்றும் கொடுக்கலதானே அதுதான் சின்னதா ஒரு பரிசு கொடுப்பம் என்று வந்தோம்` என்று ஆஹாஷினியிடம் ஒரு சிறிய பார்சலைக் கொடுத்தாள்.
வேலம்மாவின் மகள், ஒரு சின்ன டிசு பேக்கினை கனகத்திடம் கொடுத்தாள். உள்ளே ஒரு பத்து ரூபாய்க் சொக்கலேட்டும் , கொஞ்சம் மார்ஸ் மெலோவும் டொபிகளும் இருந்தன.
வேலம்மாவின் மகளும் ஒரு புதுச்சட்டைதான் போட்டிருந்தாள்.அநேகமாக‌ பேர்மன்டிலோ அல்லது தள்ளு வண்டியில் உடுப்பு விற்பவனிடம் வாங்கியிருக்க வேண்டும்.
எல்லாவற்றையும் கொடுத்த திருப்தியில் , சரிம்மா நான் போயிட்டு நாளைக்கு சீக்கிரமே வந்துடுறன் என்று வெளிக்கிட்டாள் வேலம்மா.
வேலம்மா கொடுத்த பார்சலை ஆசையாக உடைத்துப்பார்த்த ஆஹாஷினி
`அம்மா நீ வாங்கித்தந்த சட்டை சொர சொர என கடிக்கிறமாதிரி இருக்கு,எனக்கு இந்த அச்சாச் சட்டையைப்போட்டு விடு என்றாள்`.
பார்சலை வாங்கிப்பார்த்தாள் கனகம்,உள்ளே வேலம்மாவின் மகள் போட்டிருந்ததைவிட விலைகூடின சட்டை ஒன்று இருந்தது.

தாய்ப்பால்


நிலுக் ஷன் பணக்கார வீட்டுப் பையனுக்கு இருக்கும் அத்தனை அம்சங்களையும் கொண்ட இளைஞன்.இன்டர்நெஷனல் ஸ்கூலிலதான் படிச்சான். அதுக்குக் கூட எப்போதாவதுதான் போவான்.
அவனுன் அப்பாதான் சிட்டியிலேமிகப்பெரும் புள்ளி. இப்போது விவசாயத்துறை அமைச்சராக இருக்கிறார்.
நிலுகஷன் கிழமைக்கு மூன்று தடவையாவது நண்பர்களோடு சேர்ந்து தண்ணி அடிப்பான். அனேகமா பப்புக்குத்தான் போவான். ஒருதடவை அவன் நல்ல போதையில் காரோட்டி வரும்போது அக்சிடன்ட் ஆகி பிரச்சினையானது. பிளாட்பாரத்தில் படுத்திருந்த ஒரு பிச்சைக்காரனுக்கு கால் போனது. ஆனாலும் ராஜபதி அந்த விடயத்தை மீடியாக்களுக்கு போகாமல் சமாளிச்சுவிட்டார்.
அதைத்தவிர நிலுக்ஷனால் வேற எந்தத் தொந்தரவும் வந்ததில்லை ராஜபதிக்கு.
தன் பையனுக்கு மற்ற பணக்காரப்பையன்களுக்கு
இருப்பது போல ட்ரக், பொண்ணுங்க சமாச்சாரம் எல்லாம் இல்லையே , சும்மா தண்ணி மட்டும்தானே, இந்தக்காலத்தில எந்த பெடியன்கள்தான் குடிக்கவில்லை என்று பெருமைப்பட்டுக் கொள்வார்.
அந்த அக்சிடன்டுக்குப் பிறகு நிலுக்ஷனுக்கு என்றே ஒரு ட்ரைவரை வைத்திருந்தார் . நிலுக்ஷனுக்கு தானே கார் ஓடுவதுதான் பிடிக்கும். ஆனாலும் அவன் தண்ணி அடிக்கும் நாட்களில் மட்டும் அவனைப் பத்திரமாக அழைத்து வருவதே அந்த ட்ரைவரின் வேலை.
....................................................................
ராஜபதி வீட்டில் இருக்கும் நிறைய வேலைக்காரர்களில் மங்கம்மாதான் சீனியர் . 20 வருசமா வேலை செய்யும் விசுவாசமானவள். நிலுஷன் பிறந்தவுடன் வேலைக்குச் சேர்ந்தவள்.
வேலைக்குச் சேரும் போது அவளூக்கும் ஒரு கைக் குழந்தைந்த இருந்தது. மங்கம்மாவின் மகன், நிலுக்ஷனை விட 4 மாசம்தான் மூத்தவன். அந்தக்காலத்தில் தன் சொந்தப் பையனையும் கூடவே அழைத்து வந்து தூங்க வைத்த பின்தான் வீட்டு வேலைகளைக் கவனிப்பாள்.
மங்கம்மா நிலுக்ஷனை சின்ன வயசில் இருந்தே தூக்கி வளர்த்தவள். மற்ற‌ வேலைக்காரர்கலைவிட மங்கம்மாவுக்கு நிலுக்ஷன் மீது கொஞ்சம் அதிகமாகவே பாசம் வைத்திருந்தான்.
அடிக்கடி குடித்திட்டு வரும் நிலுக்சன் தன் அறையினுள் வாந்தி எடுத்து வைப்பான் , எல்லா வேலைக்காரர்களும் மனதுக்குள் திட்டிக் கொண்டே சுத்தம் செய்வார்கள்.
மங்கம்மா மட்டும் " இந்தப் பையன் இந்த வயசிலேயே இப்படி குடிச்சு குடிச்சு சீரழியிறானே " என்று கவலைப்பட்டுக் கொண்டு சுத்தம் செய்வாள். ?
இது பற்றி நிலுகஷனிடம் ஒரு நாள் சொல்லியும் இருக்காள்.
'சின்ன ஜயா?"
"என்ன மங்கம்மா?"
"இல்ல நீங்க இந்த வயசிலயே இப்படிக் குடிச்சிட்டு வாரத பார்க்கக் கவலையா இருக்கு...."
நிலுக்ஷன் எதுவும் பேசவில்லை.
இதுபற்றி அவனைப் பெத்த அம்மாவே பேசி இருந்தால்க் கூட இன்னேரம் வீட்டில் இருந்த ஏதாவது ஒன்று உடைஞ்சிருக்கும்.
மங்கம்மா பேசியதால் , எதுவும் பேசாமல் விட்டு விட்டான்.
ஏனோ தெரியாது மங்கம்மாவை மட்டும் எதிர்த்து பேசுவதில்லை நிலுக்ஷன்.
.....................................................
ராஜபதி அமைச்சர் என்பதால் வீட்டுக்கு வருபவர்கள் , வேலைக்கு வருபவர்கள் என எல்லோரும் வாசலில் வைத்து செக் பண்ணப்பட்டுத்தான் உள்ளே போக விடப்படுவார்கள். மங்கம்மாவுக்கு மட்டும் எந்த செக்கிங்கும் இல்லாமல் வீட்டுக்க்கு வந்து போகுமளவுக்கு செல்வாக்கு இருந்தது.
ராஜபதிக்கு மங்கம்மாவின் சமையலைப் பிடிக்கும். வீட்டில் இருக்கும் போதெல்லாம் அவருக்கு மங்கம்மாதான் சமைக்க வேண்டும்.
அடிக்கடி சாப்பிடும் போது மங்கம்மாவின் சமையலை "ஆகா சூப்பர் மங்கம்மா" என்று புகழ்ந்துகொண்டே சாப்பிடுவார். குறிப்பாக ஆட்டிறைச்சுக் கறிக்கு அவள் அரைக்கும் மசாலா வாசத்தை இதுவரை அவர் எந்தப் பைவ் ஸ்டார் ஹொட்டலிலயும் உணர்ந்ததில்லை .
எந்தக் கண‌வனும் இன்னோரு பெண்ணின் சமையலைப் புகழ்ந்தால் அவர் மனைவிக்கு கோபம் வருவது நியாயமானதுதான். ஆனாலும் ராஜபதியின் மனைவி மட்டும் விதி விலக்கு. கல்யாணம் முடிச்சு 33 வருசத்தில ஒருநாள் கூட தன் கண‌வனுக்குச் சமைச்சுப் போடாத அவளுக்கு கோபம் வராமல் விடுவது ஆச்சரியமில்லைதான்.
அவள் சமைச்சு போடாததுதான் ராஜபதி இந்த வயசிலயும் இவ்வள‌வு ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணமோ தெரியாது?
……………………………………………………………………………………………………………………………………………..
அன்று மங்கம்மா வேலைக்கு வர பத்து மணியாகிவிட்டது.
ராஜபதியின் வாசலில் நிறையக் கூட்டமாக இருந்தது. எல்லோர் முகத்திலும் சோகம் இருந்தது. ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்பதை வாசலில் வைத்தே உணர்ந்துகொன்டுவிட்டாள்.
"யாராக இருக்கும்?
ஒரு வேலை ஜயாவுக்கு ஏதும் நடந்துவிட்டதோ? "
படபடப்புடன் வீட்டுக்குள்ளே போனாள்.
ஹோலின் நடுவே ஒரு விலையுயர்ந்த பெட்டியினுள்ளே நிலுக்ஷனின் உடல் படுக்க வைக்கப்படிருந்தது. தலைமாட்டில் விளக்கு எரிந்து கொன்டிருந்தது.
விளக்குக்குப் பக்கத்தில் இருந்த நிலுக்ஷனின் அம்மாவின் கண் கலங்கியிருந்தது , ஒரு விலையுரர்ந்த கைக்குட்டையால் கண்ணீரைத் துடைத்துக்கொன்டிருந்தாள்.
ராஜபதியும் நன்றாக அழுதிருக்க வேண்டும் ,கண் சிவந்து வீங்கியது போல இருந்தது. இடிந்துபோய் ஒரு ஓரமாய் இருந்தார்.
நிலுஷன் இரவு குடித்துவிட்டு மாடியில் இருந்து தவறி விழுந்திருக்கிறான்.
பணக்கார வீட்டு மரணம்!!!
யாருமே சத்தமிட்டு அழவில்லை. ஏழை வீடுகளில் கேட்கும் ஒப்பாரிகள் இல்லை. எல்லோரும் ஒவ்வொரு விலையுயர்ந்த கைக்குட்டையோடு மெளனமாக அழுதுகொண்டிருந்தார்கள்.
மங்கம்மா ,நிலுக்ஷனை இந்தக் கோலத்தில் கண்டவுடன் அந்த இடமே மாறிப்போனது
“ஜயோ என்ன பெத்த ராசா “என்று கத்திக்கொண்டு நிலுகஷனின் உடலை நோக்கி அவள் ஓடியது பக்கத்தில் இருந்த பத்துப் பதினைந்து வீடுகளைத் தாண்டிக் கேட்டிருக்கும்.
நிலுக்ஷனின் தலைத் தூக்கி தன் மார்போடு அணைத்தவள்
" ஜயோ ராசா இந்த வயசிலலேயே இந்தக் குருட்டுக் கடவுள் உன்னை எடுத்துட்டானே, அவனுக்கு உசுருதான் தேவை என்றால் இந்த வயசில நான் இருக்கனே என்னைய எடுத்திருக்கலாம்தானே......"
மங்கம்மாவின் ஒப்பாரியில் வீடே அதிர்ந்தது.
பிரைம் மினிஸ்டரும் , சில வெளிநாட்டுப் பிரதி நிதிகளும் வரும் நேரம், மங்கம்மாவின் ஒப்பாரி பட்டிக்காட்டுத் தனமாக இருக்குமென நினைத்த ராஜபதியின் பி ஏ மங்கம்மாவை அந்த இடத்தில் இருந்து அழைத்துப் போகுமாறு காவலாளிகளுக்கு க் கட்டளையிட்டான்.
இரண்டு காவலாளிகள் வந்து மங்கம்மாவின் கையைப் பிடித்து தூக்க முயற்சித்தார்கள்.
ம்ம்ம்....முடியவில்லை.
நிலுக்ஷனின் தலையை தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டிருந்தவள் விடவேயில்லை.
கொஞ்ச நேர முயற்சிக்குப் பிறகு ஒரு கவலாளி மங்கம்மாவிடம்
"இங்க பாரு கிழவி
பெத்து வளர்த்து பால் குடுத்த அம்மாவே அமைதியா அழுதுகொன்டு இருக்கா நீ ஏன் ஓவரா சீன் போடுறாய்?"
"டேய் இவனும் என்ட பிள்ளதான்டா, எத்தனை நாள் என்ட மார்பில பால் குடிச்சிருக்கான். இவன்ட‌ அம்மா புட்டிப்பாலை குடுக்கச் சொல்லிட்டுப் போயிடுவா, நான் என்ட பிள்ளைக்கு பால் கொடுக்கும் போது இவன் ஏக்கமா பார்ப்பான் ..
ஒரு மார்பில என்ட பிள்ளைக்கும் மற்றதில இவனுக்கும் பால் குடுத்து வளர்த்தவள்டா நான்..." ஒப்பாரி தொடர்ந்தது.
இப்போது மங்கம்மாவை அந்த இடத்தில் இருந்து அகற்றும் எண்ணம் யாருக்கும் வரவில்லை.

ஆட்டக்காரி


கமலா !!! முழுப்பெயர் க‌மலச்செல்வி.
ஊரில எல்லோரும் அவளை ஆட்டக்காரி என்றுதான் சொல்லுவாங்க.
ஆட்டக்காரி என்றவுடன் ஏதோ நடனதாரகை என்று எண்ணி விடாதீர்கள். எங்கள் ஊரில் ஒழுக்கம் கெட்டவள் என்பதைக் குறிக்கவே ஆட்டக்காரி என்பார்கள்.
கமலாவுக்கு அந்த பெயர் வந்த காரண‌ம் வித்தியாசமானது.
கமலாதான் அந்த ஊரில் ஆட்டோ ஓட்டிய முதல்ப் பெண். ஆட்டோக்காரி என்பதே நாளடைவில் சுருங்கி ஆட்டக்காரியாகிப்போனது. கமலத்துக்கு 35 வயசாக இருக்கும்போதே புருசன் போய்ச் சேர்ந்திட்டான்.
தனித்துவிடப்பட்ட கமலா தன்னையும் தன் மகளையும் காப்பாற்ற தெரிவு செய்ததே இந்த ஆட்டோ ஓட்டும் வேலை.
ஆரம்பத்தில வயது வித்தியாசம் இல்லாம நிறைய ஆம்பிளைங்க அவளோட சேட்டைக்குப் போவார்கள்.
தன் சீட்டுக்கு கீழே எப்போதும் இருக்கும் கத்தியை எடுத்து காட்டியே
வந்தவனையெல்லாம் சமாளிச்சு 15 வருசத்த எந்த கலங்கமும் இல்லாமல் கடத்திட்டாள்.
அவளிட்ட சேட்டைக்குப் போய் கத்தியைக் காட்டினதும் பயந்து ஓடின ஆம்பிளைங்க அவளுக்கு வச்ச பேருதான் ஆட்டக்காரி.
ஆரம்பத்தில இந்த பெயர் பற்றி கமலா பெருசா அலட்டிக்கொல்ளவில்லை. ஆனாலும் அவள் ஒரே மகள் வளர வளரத்தான் தனக்கு இருக்கும் இந்தப் பெயர் தன்ட பிள்ளையின்ட எதிர்காலத்தை பாதித்து விடுமோ என்று பயப்படத்தொடங்கினாள்.
கமலத்தின் மகள் ரஞ்சிதமலர். படு கெட்டிக்காரி.தன் தைரியத்தையும் ஊட்டி வளர்த்திருந்தாள் கமலம் .
சின்ன வயசில அம்மாடா ஆட்டோவிலதான் பள்ளிக்குப் போவாள். பள்ளிக்கூடத்தில எல்லோரும் பொம்பிள ட்ரைவர் என்று அவளின் அம்மாவை கேலி செய்வது பற்றி அவள் அலட்டிக்கொள்ளுவதேயில்லை.
ரஞ்சிதமலரும் அம்மாவோட சேர்ந்து ஆட்டோ ஓடப் பழகி விட்டாள். அவளுக்கு பதினொரு வயசாக இருக்கும் போதே தனியாக ஆட்டோ ஓடுவாள்.
ரஞ்சித மலருக்கு பன்னிரெண்டு வயசான போது, கமலத்துக்கு ஊரார் தன்னை ஆட்டக்காரி என்பது பிள்ளையப் பாதிக்கக்கூடாது என்று டவுனில இருக்கிற ஒரு பாடசாலையில் சேர்த்துவிட்டாள்.
ரஞ்சித மலர் ஊரில படிக்கும்போதே நல்ல மார்க்ஸ் எடுத்து தொடர்ந்து முதலாம் பிள்ளையாக வந்ததால டவுன் பள்ளியில சேர்க்கிறதில பெரிய பிரச்சினை ஒன்றும் இருக்கவில்லை.
ரஞ்சிதமலரை டவுனில் ஒரு வுமன் ஹொஸ்டலில் சேர்த்துவிட்டு ஊரிலேயே தொடர்ந்தும் ஆட்டோ ஓட்டினாள் கமலம்.
கமலத்தைப் பார்த்து இப்போது பல பெண்கள் ஆட்டோ ஓடத் தொடங்கிவிட்டிருந்தனர். ஆனாலும் இன்னும் எல்லோரும் கமலத்தை மட்டுமே ஆட்டக்காரி என்று சொல்கிறார்கள்.
காலங்கள் கடந்தோடி இருந்தன‌
அன்றொருநாள்
உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளிவந்திருந்தன.
அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தைப்பெற்ற கிராமத்துப் பெண் என்று ரஞ்சிதமலரின் சிறிய பேட்டி ஒன்றை தொலைக்காட்சி செய்தியில் போட்டார்கள்.
"மேற்கொண்டு என்ன செய்யப்போகின்றீர்கள்."
"வெளிநாட்டில ஒரு பல்கழைக்கழகம் ஏரோனார்டிக் எஞ்ஞினியரிங் படிக்க ஸ்கொலர்சிப் தருவதாக அழைக்கிறார்கள். போகலாம் என நினைக்கிறேன்."
"எப்படி இதில் ஆர்வம் வந்தது."
"எங்க அம்மாதான் ஊரில ஆட்டோ ஓட்டிய பெண்.
அவர் மகள் நான் தான் முதலில் பிளேன் ஓட்டின பெண்ணாக வரவேண்டும் !!! "

உயர் பாதுகாப்பு வலயம்


யோகேஸ்வரி அன்று அவசரமாகவே எழும்பி இருந்தாள். தன்னிடம் இருந்த ஒரே ஒரு புடவையையும் இன்றைக்கு உடுத்தவேன்டுமென்று நேற்றுதான் துவைத்துப்போட்டிருந்தாள்.வழமைக்குமாறாக இரண்டுதடவை சன் லைட் சவர்க்காரம் போட்டுத் துவைத்திருந்தாள். நல்லவேளை நேற்று மழை பெய்யாததால் அது காய்ந்து இன்றைக்கு உடுக்கத் தயராகி இருந்தது.

`டக்கென உடுப்ப போட்டுத்து வா பிள்ள‌` என்று ஸ்டெல்லாவை நச்சரித்துக்கொண்டிருந்தாள் யோகேஸ்வரி. ஸ்டெல்லா , யோகேஸ்வரியின் மகள்.
ஸ்டெல்லா , வயிற்றில இருக்கும்போது முள்ளிவாய்க்காலில் கடைசி யுத்தம் நடந்துகொன்டிருந்தது. யோகேஸ்வரியின் சொந்த இடம் தெள்ளிப்பளை ,அங்கிருந்து இடம்பெயர்ந்து கிளிநொச்சியில்தான் கனகாலமா கணவனோடும் ,தன் மூத்த மகனோடும் வாழ்ந்து வந்தாள்.முதல்ப்பிள்ளை பிறந்து பன்னிரண்டு வருசத்துக்குப்பிறகுதான் ஸ்டெல்லா கர்ப்பத்தில் முளைத்திருந்தாள்.
யோகேஸ்வரி கர்ப்பம் தரிக்கவும் யுத்தம் உச்சக்கட்டத்தை அடையவும் சரியாக இருந்தது.
யோகேஸ்வரி அப்போது ஏழுமாதக் கர்ப்பிணி. விசுவமடுவில் ஒரு பள்ளிக்கட்டடத்தில் இடம்பெயர்ந்து தங்கி இருந்தபோது திடீரென எங்கிருந்தோ வந்துவிழுந்த ஷெல் வெடித்து கண‌வனும், முதல் மகனும் பலியாகிவிட தனித்துப்போனால் யோகேஸ்வரி. இறந்துபோன மகனினதும் கணவனினதும் முகத்தைக்கூடக் கடைசிவரை அவளால் பார்க்கமுடியவில்லை . அவ்வளவு சிதைந்துபோயிருந்தன‌ அவர்களது உடல்கள்.
ஷெல் விழுந்த உடனேயே கர்ப்பிணி என்ற காரண‌த்தால் அவள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு முல்லைத்தீவு நோக்கி அனுப்பி வைக்கப்பட்டாள். அங்கே இருந்த சில இளம் பெடியன்கள் அவளின் கணவனினதும் மகனினதும் உடல்களைப் புதைப்பதாக ஆறுதல் கூறி அவளை அனுப்பி வைத்திருந்தார்கள்.
கடைசியில் முள்ளி வாய்க்காலில் வந்து நின்றபோது யோகேஸ்வரி நிறைமாதக் கர்ப்பிணி. அவள் முள்ளிவாய்க்காளில் வந்து நின்று ஆர்மியிடம் சரண‌டையும்போது அவளிடம் வயிற்றில் இருந்த ஸ்டெல்லாவை விட உடமைகள் என்று எதுவுமே இல்லை.
ஒரு தடுப்பு முகாமில் இருந்து கர்ப்பிணி என்ற காரணத்துக்காக வைத்தியசாலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டாள். அப்போதுதான் சிஸ்டர் மேரி அவளுக்கு அறிமுகமானாள். யோகேஸ்வரி வைத்தியசாலையில் இருக்கும்போதெல்லாம் சிஸ்டர் மேரி வந்து அவளுக்காக‌ செபம் செய்வது வழக்கம். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக செபத்தில் யோகேஸ்வரி காட்டிய ஈடுபாடுதான் அவளுக்கு பிறந்த பிள்ளைக்கு `ஸ்டெல்லா ` எனப்பெயர்வரக்காரணமாயிற்று.
அதுக்கு முன் தனக்குப் பெண்பிள்ளை பிறந்தாள் தான் வழிபடும் முருகனின்மனைவியான வள்ளியின் பெயரை வைப்பதாகவே எண்ணி இருந்தால்.இப்போது அவளுக்கு முருகனையே மறந்துவிட்டது.
சிஸ்டர் மேரியின் சகவாசத்தில் யோகேஸ்வரியின் மகளுக்குப் புதுப் பெயர் மட்டும் கிடைக்கவில்லை, அகதிமுகாமில் ஒரு வீடும் கிடைத்தது.அதை வீடு என்று சொல்வதைவிட வீடு மாதிரி என்று சொல்லலாம். பக்கச் சுவர்கள் தகரத்தாலும் ,கூரை யுனிசெப் கொடுத்த டென்டினாலும் கட்டப்பட்ட ஒரு குடிசை அவ்வளவுதான்.

அந்தக் குடிசையிலேயே ஒருமாதிரியாக ஏழு வருஷம் ஓடிப்போய்விட்டது.
வயலில் கூலிவேலை செய்து ஸ்டெல்லாவையும் வளர்த்துவிட்டாள்.இரண்டு மாடுகளும் அஞ்சாறு கோழிகளும் என கொஞ்சம் சொத்துக்களும் சேர்த்துவிட்டாள்.
ஸ்டெல்லா இப்போது இரண்டாம் வகுப்புப் படிக்கிறாள்.
முன்பெல்லாம் எப்போதாவது அப்பா பற்றிக் கேட்பாள். அப்போதெல்லாம் யோகேஸ்வரியின் அழுகை மட்டுமே அவளுக்குப் பதிலாகக் கிடைக்கும்.அதனாலேயே ஸ்டெல்லா இப்போதெல்லாம் அப்பா பற்றி கேட்பதேயில்லை.
ஸ்டெல்லாவுக்குக் காட்ட அவளுடைய அப்பாவின் ஒரு போட்டோ கூட மிஞ்சியிருக்கவில்லை யோகேஸ்வரியிடம். எல்லாமே இடம்பெயரும்போது தொலைந்துவிட்டது. அப்பா என்பது ஸ்டெல்லாவுக்கு ஒரு கற்பனை உருவம். அவ்வளவுதான்!
அவளுக்கு மட்டுமல்ல நிறைய தமிழ்க் குழந்தைகளுக்கும் இந்த நிலமைதான்.
இன்றைக்கு தான் வாழ்க்கையைத் தொடங்கிய தெல்லிப்பளை வீட்டிற்கு மீண்டும் போகப்போகின்றோம் என்பதே யோகேஸ்வரியின் இன்றைய இந்த சந்தோஷத்துக்கும் பட படப்புக்கும் காரணம்.
இருபது வருசத்துக்குப்பிறகு தான் வாழ்ந்த வீட்டுக்குப் போகப்போகின்றோம் என்றால் யாருக்குத்தான் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கும்.
இவ்வளவு காலமும் உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த அவளது காணியையும் அயலவர்களின் காணியையும் விடுவிக்க இராணுவம் ஒத்துக்கொண்டிருந்தது. அமைச்சர் வந்துதான் உங்கள் இடங்களை கையளிப்பார், ஆகவே பாதுகாப்புக்காரணத்துக்காக காலை ஏழு மணிக்கே எல்லோரும் வந்திடனும் என்று சொல்லி இருந்தார்கள். அதுதான் யோகேஸ்வரி காலில் நெருப்பைக்கட்டியதுபோல டக்கென வாபுள்ள என்று ஸ்டெல்லாவை நச்சரித்துக்கொண்டு இருந்தால்.
ஸ்டெல்லாவும் ரெடியாகிவிட ஒருமாதிரியாக நேரத்துக்குகே பிரதேச செயலகத்துக்குச் போய்ச்சேர்ந்துவிட்டார்கள்.இலவசமாகவே பஸ் ஏற்பாடு செய்திருந்தார்கள் . அவளைப்போல பல குடும்பங்கள் பல எதிர்பார்ப்புக்களுடன் பஸ்ஸில் இருந்தார்கள்.
கிளிநொச்சியில் இருந்து ஆரம்பித்த பஸ் யாழ் நகரைத் தாண்டி தெல்லிப்பளை நோக்கி பயணிக்கத்தொடங்கியது. சுன்னாகம் தாண்டி தெள்ளிப்பளை நெருங்க நெருங்க அவளுக்கு மட்டுமல்ல பஸ்ஸில் இருந்த எல்லோருக்குமே பதட்டம் பற்ரிக்கொண்டது.
தங்கள் தாய் மண்ணில் இருபது வருசத்துக்கு பிறகு கால் வைப்பதென்றால் சும்மாவா?
ஒரு மாதிரியாக பஸ் தெள்ளிப்பளையை அடைந்தது, ஆமிக்காரன் வந்து செக் பண்ணியபின் ஒரு முள்வேலி போடப்பட்டிருந்த வெட்டவெளிக்கு அழைத்துப்போனார்கள்.
அங்கே பந்தல் போட்டு அலங்கரித்து இருந்தார்கள்.
`அமைச்சர் வரும்வரை இங்கே இருங்கள்` என ஒரு ஆமிக்காரன் அரைகுறைத் தமிழில் சொல்லிவிட்டுப்போனான்.குடிக்க பென்டா சோடாவும் கடிக்க சொக்கலேட் கிறீம் பிஸ்கட்டும் கொடுத்தார்கள்.
எவருக்கும் இருப்புக்கொள்ளவில்லை, தங்கள் சொந்த வீட்டை
பார்க்க வேண்டும் ,தாங்கள் விளையாடிய மண்ணில் மீண்டும் ஓடியாடித் திரிய வேண்டும் பல எதிர்பார்ப்புக்களுடன் பதை பதைத்துக்கொண்டு இருந்தார்கள்.
இருந்தாலும் என்ன செய்ய?
இரண்டுமணி நேரத்தின் பின்தான் அமைச்சர் வந்தார். அவர் வந்த பின்பு ஒரு இரண்டரைமணிநேரம் பல பேர் மாறி மாறிப்பேசினார்கள்.
சிங்களத்தில் பேசியவர்கள் ` தங்கள் சொந்த இடத்தையே பரிசாக கொடுப்பதுபோன்று பேசினார்கள்`. சில தமிழ் அரசியல்வாதிகள் தங்களால்தான் இது சாத்தியமானது என தங்களின் அரசியல் சாணக்கியத்தை புகழ்ந்து கொட்டினார்கள்.
கடைசியில் ஒருமாதிரியாக ஆமியின் பாதுகாப்புடன் அவர்களின் இடங்களுக்கு அழைத்துசெல்லப்பட்டார்கள்.
முழுவதுமாக காடு வளர்ந்த அடையாளம் தெரியாமல் போய் இருந்தாலும் யோகேஸ்வரிக்கு தன் வீட்டைக் கண்டு பிடிப்பதில் பெரிய கஷ்டம் இருக்கவில்லை .
வீட்டைப்பார்த்ததும் யோகேஸ்வரிக்குத் தூக்கிவாரிப்போட்டது. அவளது சந்தோஷம் எதிர்பார்ப்பு எல்லாம் அப்படியே சுக்கு நூறாகிப்போனது .
வீடு என்பதற்கு எந்த அடையாளமே இல்லை. எல்லாமே உடைந்து சிதைந்துபோய்க் கிடந்தது வீட்டைச் சுற்றியும் ,அறைகளுக்குள்ளும் மரங்கள் வளர்ந்து காடுமாதிரிக் காட்சி அளித்தது.
ஹால்(வரவேற்பறை) மட்டும் கொங்கிரிட் போட்டு இருந்ததால் கூரையில் சிறிய வெடிப்புகளுடன் அப்படியே இருந்தது.
வாசலில் இருந்த பற்றையை விளக்கிவிட்டு ஹாலின் உள்ளே போனால்.
சுவரெல்லாம் வெடித்து ஹாலின் கொன்ஹ்கிரிட் தூண் எப்போதும் விழலாம் என்ற நிலையில் இருந்தது. தரையில் சின்னச் சின்ன புல் முளைத்து நிலம் வெடித்திருந்தது.மிச்சமாயியிருந்த சுவர்களிலும் தோட்டாக்கள் பட்ட தடையங்கள் இருந்தன.
அந்த வீட்டில் இருபது வருசத்துக்குமுன் தான் வாழ்ந்த நினைவுகளோடு சுவரில் சாய்ந்து கண்ணீர் விட்டவளின் காலில் ஏதோ தட்டுப்பட்டது.
தட்டுப்பட்டதை குனிந்து எடுத்தவள் , சத்தமாக கத்தினாள் .
`ஸ்டெல்லா பிள்ள‌ ஸ்டெல்லா இங்க வாடி ...இங்க வா... வந்து உன்ட அப்பாட முகத்தப்பாரு`.
ஆம் அது அந்தக்காலத்தில் சுவரில் பிரேம் போட்டு தொங்கவிட்டிருந்த‌ அவளது கலியாண‌ப்படம் . இப்போது அந்தப்படத்தில் அவள‌து முகம் தெளிவாகத் தெரியாவிட்டாலும் அவளது கணவனின் முகம் கொஞ்சம் தெளிவாகவே தெரிந்தது.
ஓடிவந்த ஸ்டெல்லா அப்பாவின் முகத்தை முதன் முதலில் பார்த்துவிட்டு போட்டோவை நெஞ்சிலே அழுத்தியபடி யோகேஸ்வரியின் மார்பில் சாய்ந்தால்.
யோகேஸ்வரியின் கத்தலைக்கேட்டு ஓடிவந்த நிரூபர்கள் அழுதுகொண்டிருக்கும் இருவரையும் வீடியோ எடுத்தார்கள்.
அந்த நேரடி ஒளிபரப்பின் பிண்ணனியில் , சொந்தவீட்டிற்கு வந்த சந்தோசத்தில் அமைச்சருக்கு ஆனந்தக்கண்ணிரில் நன்றி சொல்லும் தாயும் மகளும் என அறிவிப்பாளர் சொல்லிக்கொன்டிருந்தார்